அரசியல்


அரசியல் தலைவர்கள் பொதுமக்களின் பிரதிநிதிகளாகவும், அவர்களின் மறுபதிப்பாகவும் வாழ வேண்டும். அரசியல்வாதிகளின் எளிமையான தோற்றம் அவர்களை மக்களோடு சமப்படுத்தும்.
பகட்டும் படோபாவமும், ஆடம்பரமும் அகங்காரமும் மன்னர்களிடம் இருந்து, அதனாலேயே அழிந்தார்கள்.
இந்த மனோபாவத்தை மாற்றும் மனிதனாக எளிமையாய் வாழ்ந்து அரசியலில் எளிமையின் சிகரமாய் பரிணமித்தவர்தான் பாரதப் பெருந்தலைவர் கு.காமராஜ்.

காங்கிரசின் தோற்றமும், கர்மவீரரின் பார்வையும்

உலகில் உள்ள கண்டங்களில் மிகப் பெரியது ஆசியக் கண்டம். அக்கண்டத்தின் அடிவாரத்தில் அமைந்துள்ளது நம் நாடு.செல்வச் செழுமையான நம் நாட்டில் பருத்தித்துணி,சீரகம்,ஏலக்காய் போன்ற வாசனைப் பொருட்கள் தனிச் சிறப்பு வாய்ந்தவை.இதனை அன்னியர்கள் பொருள் பரிமாற்ற வணிக அடிப்படையில் தங்கத்தை அளித்து இவ்வாசனைப் பொருட்களை வாங்கிச் செல்வர்.இவ்வாறு கிரேக்க நாட்டவர்களும் ரோமாபுரி நாட்டினரும் 2500 ஆண்டுக்களுக்கு முன்பே நம் நாட்டுடன் வணிகம் வைத்திருந்தனர்.

1498ல் ஸ்பெயின் நாட்டு அரசின் உதவியின் அடிப்படையில் வாஸ்கோடகாமா கேரளாவில் உள்ள கோழிக்கோடு வந்தடைந்தார்.இங்கு தன் வணிகத்தைத் துவங்கினார். இங்கு வாங்கிய பொருட்களை தம் நாட்டில் விற்றார். இதனைத் தொடர்ந்து பிற ஐரோப்பிய நாட்டினரும் வணிகம் செய்யத் தொடங்கினர்.

1600ல் கிழக்கிந்திய கம்பெனி என்ற ஒன்றை உருவாக்கியது. காக்கின்ஸ்,தாமஸ்ரோ இருவரும் மொகலாய மன்னர் ஜகாங்கீரைச் சந்தித்து தம் வணிக்கத்தை சூரத்தில் துவங்கினர்.1939ல் சென்னையைச் சென்னையப்பநாயக்கரிடம் விலைக்கு வாங்கியது.1757ல் இருந்து 1857க்குள் இந்தியா முழுவதையும் தன் கை வசம் கொண்டு வந்தனர்.கிழக்கிந்திய கம்பெனியர் 1.11.1858ல் இந்தியாவை இங்கிலாந்தின் ராணி விக்டோரியாவின் நேரடி ஆட்சியின் கீழ் கொண்டு வந்தனர்.

அரசினரும்,மக்களும் கருத்துப் பறிமாற்றம் செய்ய காங்கிரஸ் என்ற இயக்கம் உருவெடுத்தது.

1884ம் ஆண்டு டிசம்பர் 26ம் தேதி A.O.ஹுயும்,வில்லியம் வெட்டர்பன் ஆகிய இரு ஆங்கிலேயரின் யோசனையின் பேரில் இந்தக் கூட்டம் நடைபெற்றது.முதன் முதலில் காங்கிரஸ் மகாசபை சென்னை மாகாணத்தில் தான்.

1885 டிசம்பர் 28ம் தேதி பம்பாயில் உள்ள கோகில் தாஸ் தேஜ்பால் சமஸ்கிருதக் கல்லூரியில் முதல் காங்கிரஸ் மாநாடு நடைபெற்றது.இதில் 72 பிரதிநிதிகளும் 50 பத்திரிகை நிருபர்களும் கலந்து கொண்டார்கள்.

மாநாட்டில் தீர்மானங்கள்:
  1. இந்தியா மாவட்ட ஆட்சியர் தேர்வான ICS (தற்போது IAS) தேர்வு லண்டனில் நடத்தாமல் இந்தியாவில் நடத்த வேண்டும்.
  2. இராணுவச் செலவைக் குறைக்க வேண்டும்.
  3. இந்தியாவிலுள்ள எட்டு மாநிலத்திலும் சட்டசபை விரிவாக்கம் செய்ய வேண்டும்.
  4. அரசாங்க வேலை,இந்தியருக்கு கொடுக்கப்பட வேண்டும்.
இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டாலும் அதனை ஆங்கிலேய அரசு கண்டு கொள்ளவில்லை.

1905ம் ஆண்டு பிரித்தாளும் சூழ்ச்சியை உருவாக்கி வங்காள மாநிலத்தை இரண்டாகப் பிரித்தது ஆங்கில அரசு.இதில் ஒரு பிரிவினர் மிதவாதிகள் மற்றொரு பிரிவினர் தீவிரவாதிகள். பின்னர் 1911ல் அன்னிபெசண்ட் அம்மையார் முயற்சியில் காங்கிரஸ் தலைவர்கள் இணைந்தனர்.

1914ம் ஆண்டு உலகப்போர் மூண்டது.தனது நாட்டிற்காக ஆங்கிலேயர் நம் நாட்டினரை போரிட அனுப்பினர். இதைக் காங்கிரஸ் இயக்கம் வன்மையாக கண்டித்தும் பயனில்லை.1918ல் போர் முடிவடைந்தது.

காங்கிரஸ் தொண்டரான திலகரின் கூட்டம் மதுரையில் உள்ள விக்டோரியா எட்வர்டு ஹாலில் நடைபெற்றது. காமராஜர், காங்கிரஸ் இயக்கத்தின் செயல்பாடுகளை அறிய மிகவும் ஆர்வம் காட்டினார்,கூட்டத்திற்குச் சென்ற ஞானம்பிள்ளை அவர்களிடம் கூட்டத்தில் நடந்தனவற்றைக் கேட்டறிந்தார்.

பின்குறிப்பு:-ஞானம்பிள்ளை என்பவர் கொல்லர் தெரு,விருதுநகரில் பெட்டிக்கடை நடத்தி வந்தார்.

நாட்கள் கழிய காமராஜர் வீட்டினருக்கு கவலை ஏற்பட்டது.இவ்வாறாக இயக்கத்தின்பால் ஈர்க்கப்பட்டு தன் வாழ்க்கையை இழந்துவிடுவாரோ என்று. இவ்வாறு எண்ணியவர்கள் கேரளாவில் உள்ள தன் தாய்மாமா வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். அங்கு ஈ.வே.ரா.பெரியார் அவர்கள் தாழ்த்தப்பட்டோரின் முன்னேற்றத்துக்காக வைக்கம் போராட்டம் நடத்தி வந்தார். அதில் காமராஜர் பங்கு கொண்டார். அப்போராட்டத்தில் காமராஜர் கைது செய்யப்படவில்லை.பின்னர் விருதுநகர் வந்தபின் தம் நண்பர்களுடன் இதைப் பற்றி பேசி வந்தார்.

இவ்வியக்கத்தால் ஈர்க்கப்பட்ட காமராஜர் தினமும் பொறையூர் நூலகம் சென்று பிறநாட்டு அரசியல்வாதிகளைப் பற்றி அறிந்து வந்தார். 1919ம் ஆண்டு ரெளலட் சட்டம் அறிவிக்கப்பட்டது.(ஜனவரி மாதம்) இதனை மிதவாதிகள்,தீவிரவாதிகள் மற்றும் மக்கள் எதிர்த்தனர்.

காந்திஜி அவர்கள் நோய்வாய்ப்பட்டிருந்த தருவாயிலும் சத்தியாகிரகப் போர் தொடங்கும் என அறிவித்தார். மார்ச் 30ல் நாடெங்கும் உபவாசமும் பிரார்த்தனைகளும் நடந்தன. ஏப்ரல் 6ல் அறப்போர் நடைபெற்றது. அறப்போராட்டங்கள் ஏப்ரல் 13ம் நாள் பஞ்சாலம்(பஞ்சாப்) மாநிலத்தில் ‘பாய்சாகி திருவிழா’ நடைப்பெற்றது.இடம்:ஜாலியன் வாலாபால். இத்திருவிழாவில் அனைத்து மதத்தினரும் பங்கேற்றனர். இந்தத் திருவிழா கூட்டமானது ‘தேதத் தலைவர்களை விடுதலை செய்’ என்று கோருவதற்கான பொது கூட்டமாக மாறியது. அரசாங்கத்தை எதிர்க்கப் பகிரங்கக் கூட்டமா? என ஆங்கிலேயர் தம் ஆயுதப்படையினரின் மூலம் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் 1650 தடவை சுட்டதாகவும் 370 பேர் கொல்லப்பட்டதாகவும் 1100 பேர் காயமடைந்ததாகவும் அரசு தரப்பு விசாரணை அறிக்கையில் கூறப்பட்டது. நெஞ்சை உலுக்கிய செய்தியான இது ‘சுதேசி மித்திரன்’ என்ற பத்திரிக்கையில் வெளியானது. இப்படுகொலைக்கு தேசத்தலைவர்களின் கண்டன கூட்டங்கள் நடத்த வேண்டும் என்ற தீர்மானங்கள் வெளியிடப்பட்டிருந்தன.

இவ்வாறு செய்திகளைக் கேட்டு காமராஜர் காங்கிரஸின் பால் ஈர்க்கப்பட்டு தேசிய தொண்டனாக உருவெடுத்தார்.

காங்கிரஸில் காமராஜர்

முதல் முறையாக தன் குருவான சத்தியமூர்த்தியை மதுரையில் சந்திதார். 1920ம் ஆண்டு சுயராஜ்யம் வேண்டும் என்ற நோக்கத்திற்காக ஒத்துழையாமைப் போராட்டம் நடத்தப் பெற்றது.காந்திஜியின் ஒத்துழையாமை போராட்டம் ஆகஸ்ட் 1ம் தேதி நாடெங்கும் துவங்கியது. மதுரை காங்கிரஸ் காரியாலயத்தில் காமராஜர் ஒத்துழையாமை போராட்டத்தைப் பற்றி உரையாடினார்.

கதர் ஆடை:
இப்போராட்டத்தின் விளைவாக பெரும்பாலானோர் கதர் ஆடை அணியத் துவங்கினார். ஜார்ஜ் ஜோசப் என்பவர் வழக்கறிஞர்.இவர் லண்டனில் படித்தவர்.இவர் மதுரையில் நீதிமன்றத்தில் வாதாடும் பொழுது கதர் ஆடை அணிந்திருப்பார். காமராஜரும்,அவருடைய நண்பர் பலரும் இவருடைய வாதாடும் திறமையைக் காண அடிக்கடி மதுரை செல்வர். முதலில் பம்பாய் அண்ணாச்சி என்பவர் மட்டும் கதர் அடை அணிவார். போராட்டத்திற்கு பிறகு ஐந்நூறுக்கு மேற்பட்டோர் கதர் அடை அணிந்தனர்.அதில் ஒருவர் காமராஜர்.

1920ம் ஆண்டு திலகர் மறைந்தார். 1919ல் ஆங்கிலேய அரசு இந்தியாவில் கட்சி கொண்டு வர வேண்டும் எனச் சட்டம் பிறப்பித்தது. இதன்படி 1920 நவம்பர்-டிசம்பர் மாதத்தில் தேர்தல் நடத்தப்பட்டது.இது MLC (Madras Legislative Council) சட்டமன்ற உறுப்பினர்கள் என அழைக்கப்பட்டனர். சென்னை மாகாணத்தில் நீதிக்கட்சி, 98 இடங்களுள் 63 இடங்களில் வெற்றிபெற்றது. 17.12.1920ல் முதல் முதலமைச்சராக ஏ.சுப்பராயலு ரெட்டியார் பொறுப்பேற்றார். 1921ம் ஆண்டு ஆளுநராக சர்.பி.இராஜகோபாலச்சாரியார் ஜனவரி 8 அன்று நியமிக்கப்பட்டார்.

பிரிட்டிஷ் இளவரசன்:
பிரிட்டிஷ் இளவரசரான வேல்ஸ் இந்தியா வருவதாகவும்,சட்டசபையை இளவரசர் திறந்துவைப்பதாகவும் கூறப்பட்டது. இதனை எதிர்க்க அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி முடிவெடுத்தது. முன்னெச்சரிக்கையாக ஆங்கிலேய அரசு,காங்கிரஸ் கமிட்டியின் பிரமுகர் பலரைக் கைது செய்தது. பண்டித ஜவர்ஹலால் நேரு,மோதிலால் நேரு,லாலா லஜபதிராய் போன்ற தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். இளவரசர் வருகையைப் பற்றி அறிந்த காமராஜர் தமது நண்பரான சண்முகத்தோடு சென்னைக்குச் சென்றார்.

காங்கிரஸ் உறுப்பினர்:
காங்கிரஸ் கமிட்டி காங்கிரஸ் ஸ்தாபதனமாக மாறி வளர்ச்சி அடைந்தது.தியாகி திலகர் நினைவாக திலகர் சுயராஜ்ய நிதி என்ற பெயரில் நிதி திரட்டினர்.
  1. ஒரு கோடி நிதி திரட்ட வேண்டும்.
  2. ஒரு கோடி அங்கத்தினர்கள் காங்கிரஸில் சேர வேண்டும்.
  3. அறுபது லட்சம் ராட்டைகள் நாடெங்கும் சுழன்று கதர் இயக்கம் தீவிரமாக வேண்டும்.
என்ற நோக்கத்தில் ஆரம்பிக்கப்பட்ட இத்திட்டங்கள் அனைத்தும் வெற்றியை நோக்கி பயணித்தது.

விருதுபட்டியில் விருதுபட்டி டவுண் காங்கிரஸ் கமிட்டி என்று அமைக்கப்பெற்றது. இதில் காமராஜர் உறுப்பினராக இணைந்தார். பம்பாய் அண்ணாச்சி கோவிந்தசாமி நாடார் முதல் தலைவராக தேர்தெடுக்கப்பட்டார். காமராஜரும்,அவருடைய சகாக்களும் விருதுநகரில் பொதுக்கூட்டம் நடத்த ஆர்வம் காட்டினர். முதன் முதலில் மேடையில் பேசிய காமராஜர் முதலாம் பேச்சிலேயே மக்களைக் கவர்ந்துவிட்டார்.

முதல் நோட்டீஸ்:
காங்கிரஸ் பொதுக் கூட்டங்கள் மற்றும் காங்கிரஸ் செயல்பாடுகளை மக்கள் அறிய வேண்டும் என எண்ணினார்.அவ்வாறு விருதுபட்டியில் ஊர் புரோகிதர் ராமலிங்க குருக்கள் நடத்திய ’சச்சிதானந்தம்’ என்ற அச்சகத்தில் நோட்டீஸ்களை அச்சடித்து விநியோகம் செய்தார்.இது மக்களுடையே மிக்கச்சிறந்த வரவேற்பு பெற்றது. 1923-ல் கள்ளுக்கடை மறியலை காமராஜர் மதுரை மாநகரில் முன்னின்று நடத்தினார்.

விருதுபட்டி->விருதுநகர்:
பொருளாதாரம், வாழ்க்கைத் தரம் முதலியனவற்றில் முன்னேறிய விருதுபட்டி வாழ்மக்கள் விருதுநகராக மாற்ற விரும்பினர். விருதை பிரமுகர்களின் முயற்சியால் 29.10.1923ல் விருதுநகராக மாறியது. முதல் நகராட்சி தலைவராக (R.V.கம்பெனி தற்போதைய LRC) துரை பொறுப்பேற்றார்.

1930->பிரிட்டிஷ் அரசாங்கம் உப்புக்கும் வரி விதித்தல்:
உப்பு வரி விதிப்பிற்காக காந்திஜி உப்பு சத்தியாகிரஹ போராட்டம் நடத்தினார். தடையை மீறி தண்டியில் தம் தொண்டர்களோடு சென்று உப்பை அள்ளினார்.(ஏப்ரல் 6) மே 5 ஆம் நாள் கைது செய்யப்பட்டார். இதற்கிடையில் சென்னை மாகாணத்தில் இராஜாஜி தலைமையில் இச்சட்டத்தை எதிர்த்து திருச்சியிலிருந்து வேதாரண்யதிற்கு புனிதயாத்திரை மேற்கொண்டார். இதுவே காமரஜர் கைது செய்யபட்டு சிறை சென்ற முதல் தடவை ஆகும். இதனை அறிந்த காமராஜின் பாட்டிக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டது. காமராஜரை ஆந்திரா-அலிபுரம் பெல்லாரி சிறையில் அடைக்கப்ப்ட்டார். பாட்டி மிகவும் மோசமான நிலையில் இருந்தபோதும் பரோலில் வர மறுத்தார்.

1931-ஆம் ஆண்டு காந்தி-இர்வின் ஒப்பந்தம்:
1930ல் வட்டமேஜை மாநாட்டில் காந்தி கலந்து கொள்ளாததால்,இரண்டாவது வட்டமேஜை மாநாட்டில் கலந்து கொள்ளும் இர்வின் மூலம் ஆங்கிலேயர் பேசினர். இதற்கு காந்திஜி உப்பு சத்தியாகிரகத்தில் கைது செய்த தொண்டர்களை விடுதலை செய்யுமாறு சொன்னார். இதற்கிணங்க கைது செய்யபட்டவர்களை விடுதலை செய்தது ஆங்கிலேய அரசு.

பின்னர் 1931ம் ஆண்டு நடைபெற்ற வட்டமேஜை மாநாட்டில் பங்கேற்றார். 1931ம் ஆண்டு இராஜாஜி தலைவராகவும் துணைத்தலைவராக சத்தியமூர்த்தி அவர்களும் காமராஜர் காரிய கமிட்டி உறுப்பினராகவும் பணியாற்றினர். 1935ம் ஆண்டு சத்தியமூர்த்தி அவர்கள் மத்திய சட்டசபை உறுப்பினராக இருந்தார். அப்போது டெல்லி சென்ற காமராஜரை தம் சகாகளிடம் “Sri Kamaraj is a outstanding congress worker in Chennai. He is not only my colleague but also my counseller.” என்று கூறி அறிமுகப்படுத்தினார்.

1936 ம் ஆண்டு காங்கிரஸ் கமிட்டி தேர்தல் நடைபெற்றது. அதில் காமரஜர் செயலாளராக பொறுப்பேற்றார்.

1937 ம் ஆண்டு சென்னை மாகாண சட்டசபைத் தேர்தல் நடத்த பிரிட்டிஷ் அரசு முடிவெடுத்தது. நீதிக்கட்சி, காங்கிரசை தோற்கடிக்கும் என்ற எண்ணத்தில், சத்தியமூர்த்தி ஐயா மற்றும் காமராஜரை பற்றி அறியாத பிரிட்டிஷ் அரசு இத்தேர்தலை அறிவித்தது. விருதுநகரை உள்ளடக்கிய சாத்தூரில் பொதுத் தொகுதியில் மாணிக்கம் என்பவரும், ரிசர்வ் தொகுதியில் காமராஜரும் போட்டியிட்டு வெற்றி பெற்றனர்.

1939ம் ஆண்டு இரண்டாம் உலகப் போர் துவங்கியது.இதில் பிரிட்டிஷ், அமெரிக்கா, ரஷ்யா ஆகிய நாடுகள் ஒரு பக்கமும், ஜெர்மன், ஜப்பான், இத்தாலி ஆகிய நாடுகள் ஒரு பக்கமும் பங்கேற்றனர். இதில் பிரிட்டனுக்கு ஆதரவாக இந்தியா போரிடும் என அறிவித்தனர். இதற்குத் தலைவர்கள் தம் எதிர்ப்பை தெரிவித்தனர். காந்திஜி போரின் முடிவில் இந்தியாவிற்கு சுதந்திரம் அறிவித்தால் போர் முயற்சிக்கு அதரவு அளிப்பதாகக் கூறினார்.இருப்பினும் இதற்கு பிரிட்டிஷ் அரசாங்கம் ஒப்புக் கொள்ளவில்லை. அனைத்து மாகாண தலைவர்களும் தம் பதவியை ராஜினாமா செய்தனர், 29.10.1939ல் இராஜாஜி அவர்களும் இராஜினாமா செய்தார். பின்னர் 1940ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் சத்தியமூர்த்தி ஐயா அவர்கள் காமராஜரைத் தலைவராக நிறுத்தினர்.பிப்ரவரி 15ம் நாள் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இரண்டாம் உலகப் போர் (1939 - 1945) நடைபெற்றது.அப்போது சென்னை கவர்னர் ஆர்தர் ஹோப் யுத்தநிதி வசூல் செய்தார். இதற்கு மாறாக காமராஜர் “அந்நியனுக்கு யுத்தநிதி கொடுக்காதீர்கள்” என்று பிரச்சாரம் மேற்கொண்டார். இதனால் காமராஜர் கைது செய்யப்பட்டார். காமராஜர் கைது செய்யப்படுவதற்கு முன்,சென்னை காங்கிரஸ் கமிட்டி தலைவராக வேலூர் ‘ஜனாப் உபயத்துல்லா’ இருக்க வேண்டும் என அறிவித்தார். 1941->ஆம் ஆண்டு சிறைவாசத்தில் காமராஜர் இருந்தபோதும் நகரசபைத் தலைவராக தேர்வு செய்யப்பட்டார். 1942->ஆம் ஆண்டு மார்ச் மாதம் விடுதலை செய்யபட்டார். மறுவாரம் கூடிய நகரசபைக் கூட்டத்திற்கு மார்ச் 16ம் நாள் சென்றார். 91வது தீர்மானத்தில் கையொப்பமிட்டு எழுந்தார். தன்னை நகரசபை உறுப்பினராக தேர்த்தெடுத்ததற்கு மகிழ்ச்சி தெரிவித்து கட்சிப்பணியின் காரணமாக இப்பணியை இராஜினாமா செய்கிறேன் என்று கூறிவிட்டார். காங்கிரஸ் மகாசபை கூடிய போது ‘வெள்ளையனே வெளியேறு’ என்ற தீர்மானத்தை நேருஜி முன்மொழிந்தார். இவ்வாறு தீர்மானங்களும்,கொள்கைகளும் உயர்ந்தோங்க 1947ம் ஆண்டு இந்தியா சுதந்திரக் காற்றை சுவாசித்தது.


சுதந்திரத்திற்கு பின்..

1945ம் ஆண்டு காங்கிரஸ் தொழிற்சங்கமானது முத்துரங்க முதலியார் முயற்சியால் சென்னை பாரிமுனையில் செட்டித் தெருவில் ‘காங்கிரஸ் சங்கம்’ எனத் துவக்கப்பட்டது. இதில் தொழிலாளர்கள் பலரும் இணைந்தனர்.ஆகஸ்ட் புரட்சியில் கைதான காமராஜர் விடுதலைக்குப் பின் இதனைப் பற்றி ஆர்.வெங்கட்ராமன், ராஜகோபால் ஆகியோரிடம் கேட்டறிந்தார்.சென்னை மாகாணத் தலைவர் காமராஜர் ‘சென்னை மாகாணக் காங்கிரஸ் தொழிற்சங்கம்’ என்ற பிரிவை ஏற்படுத்தினார். தொழிலாள்ர் பிரிவு நடத்துவதற்கான செலவைக் காங்கிரஸ் இயக்கம் ஏற்றுக் கொள்ளும் எனக் கூறினார்.

1946ம் ஆண்டு சட்டசபைத் தேர்தல் அறிவிக்கப்பட்டது.இதில் இச்சங்கத்திற்கு 4 இடங்கள் ஒதுக்கப்பட்டன.
  1. பக்கிங்ஹாம் மில் தொழிற்சங்கம்
  2. சென்னை ஆடைத் தொழிலாளர்கள்
  3. கோவை பஞ்சாலைத் தொழிலாளர்கள்
  4. தென்னிந்திய இரயில்வே தொழிலாளர்கள்

சென்னை மாகாணக் காங்கிரஸ் சார்பில் கனியப்பன் என்ற ஏழைத் தொழிலாளி நிறுத்தப்பட்டு சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். காங்கிரஸ் அணி வெற்றிபெற்றது.இதைத் தொடர்ந்து மந்திரிசபை அமைக்க பேச்சுவார்த்தை துவங்கியது. காங்கிரஸ் மேல்மட்டத்தினர் இராஜாஜியை முதல் மந்திரியாக முன்மொழிந்தனர்.

காமராஜர்,சாளா வெங்கட்டராவ், கோபால் ரெட்டி, பட்டாபி சீதாதாமையா, பிரகாசம், மாதவமேனன், இராஜாஜி ஆகிய ஏழு பேரும் ஏப்ரல் 9ம் தேதி காந்திஜியைச் சந்தித்தார்கள். ஆட்சி அமைப்பினைப் பற்றி காந்திஜியிடம் ஆலோசனை நடத்தினர். பிரகாசம் பொது விவகாரத்தில் ஒழுங்காக நடந்து கொள்ளவில்லை.எனவே அவர் முதல் மந்திரியாக வருவது மட்டுமல்ல சாதாரண மந்தியாகவும் வரக்கூடாது எனக் கூறிய காந்திஜி, பட்டாபி சீதாராமையா, இராஜாஜி ஆகிய இருவருள் ஒருவரைத் தேர்ந்தெடுக்குமாறு கூறினார். பிரகாசம் முதல் மந்திரியாக வருவதை காந்திஜி விரும்பாததால், ‘காந்திஜியின் கருத்துக்கு எதிராக நானும் நடக்க மாட்டேன்’ என்று கூறினார் காமராஜர்.பின்னர் முத்துரங்க முதலியாரை காங்கிரஸ் கமிட்டி முதல் மந்திரி தேர்தலுக்குத் தீர்மானித்தது. தேர்தல் நடைபெற்றது.பிரகாசம் 7 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். 1947ம் ஆண்டு பிரகாசம் மந்திரிசபையைக் கவிழ்ப்பதற்கு நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. பின் ஒ.பி.ராமசாமி ரெட்டியார் பெயரை இராஜாஜி சிபாரிசு செய்தார். நம்பிக்கையில்லா தீர்மானத்தில் பிரகாசம் 73 வாக்குகளும், ராமசாமி ரெட்டியார் 166 வாக்குகளும் பெற்றனர். மார்ச் 14ம் நாள் பிரகாசம் தனது முதல் மந்திரி பதவியை இராஜினாமா செய்தனர். மார்ச் 21 ம் நாள் சென்னை மாகாணத்தின் இரண்டாவது முதல் மந்திரியாக ஓ.பி.ஆர். பதவி ஏற்றார்.

ஜனவரி மாதம் 1948 30ம் நாள் வெள்ளிக் கிழமை மாலை 5 மணி காந்திஜி டெல்லி பிரார்த்தனையின் போது சுட்டுக் கொல்லப்ப்ட்டார். இச்செய்தியைக் கேட்ட காமராஜர் அதிர்ச்சியுற்றார்.கண்களில் நீர் வழிந்தது. துன்பம் ஒரு புறம் இருக்க, ‘வேற்றுமையை வள்ர்க்காதீர்;மதவெறியை ஊட்டாதீர்;மன உறுதியுடன் சமுதாய நலம் பெற பாடுபடுங்கள்’ எனக் கூறி உடனே விடை பெற்றார். காமராஜர் தன் வாழ்நாளில் கண்ணீர் விட்டது இதுவே முதல் தடவையாக இருக்கும்.

1949ம் ஆண்டு நடந்த காங்கிரஸ் தலைவருக்கான தேர்தலில் காமராஜரே வெற்றி பெற்றார். 1952ம் ஆண்டு இந்தியப் பாராளுமன்ற தேர்தல் நடைபெற்றது.அதில் காமராஜர் ஸ்ரீவில்லிப்புத்துர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.அவ்வாண்டு நடைபெற்ற சென்னை மாகாண காங்கிரஸ் தேர்தலில் காமராஜர் போட்டியிடவில்லை. பின்னர் டிசம்பர் 26ம் தேதி சென்னை மாகாண காங்கிரஸ் தேர்தல் மீண்டும் வந்தது. அதில் காமராஜர் தேர்வு செய்யப்பட்டார்.